×

அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் போர்வையில் மகன் நடத்தும் அடாவடி: குடியிருப்பு இல்லாத பகுதிக்கு ரூ.1.5 கோடியில் சாலை; அனைத்து பணிகளிலும் முறைகேடு; வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மோசடி


அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் என்ற போர்வையில் அவரது மகன் நடத்தும் அடாவடியால், பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குடியிருப்பே இல்லாத பகுதிக்கு ஒன்றரை கோடியில் சாலை அமைத்தது, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளின் கூலியிலும் கை வைப்பதால் கொந்தளிப்பில் அப்பகுதி மக்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது அனுப்பம்பட்டு ஊராட்சி. பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கும், திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. தற்போது, அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணவேணி அப்பாவு என்பவர் பதவி வகித்து வருகிறார்.

கிருஷ்ணவேணி, அப்பாவு தம்பதியருக்கு ஜான் பீட்டர், சார்லஸ் என்கிற உமா மகேஸ்வரன், ஜஸ்டின் ஆகிய 3 மகன்களும், ஜூலி என்கிற மகளும் உள்ளனர். இவர்களில் சார்லஸ் என்கிற உமா மகேஸ்வரன் அதிமுக அம்மா பேரவை துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் 2014ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக 3 ஆண்டுகள் பதவி வகித்தவர். பதவி வகித்து வந்த காலத்தில் இவர் மீது அனுப்பம்பட்டு ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இவரது தாய் கிருஷ்ணவேணி அப்பாவு ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வரும் நிலையில், இவர் பொம்மை போல செயல்படுவதாகவும், இவரது மகனான சார்லஸ் தான் ஊராட்சி மன்ற தலைவர் போன்று செயல்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

அதோடு மட்டுமல்ல இந்த பதவியை முன்வைத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், அதன் மூலம் பல லட்சம் மோசடி செய்வதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அவரது அட்டூழியம் அதிகரித்து வருவதால், ஊராட்சி மன்ற பணிகள் அனைத்தும் அரையும் குறையுமாக நடைபெறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதற்கு காரணம், ஊராட்சியில் நடைபெறும் அனைத்து பணிகளையும் இவர் தான் தலையிட்டு நடத்துகிறாராம். தனது பண பலத்தால் ஊராட்சியில் யாரும் எதிர்த்து பேச முடியாத அளவுக்கு அப்பகுதி மக்களை மிரட்டி வைத்துள்ளதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் அவர் மீது கொந்தளிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் யார் என்று கேட்டால் சார்லஸ் பெயரை தான் கூறும் அளவுக்கு தனது அடாவடி தனத்தை அரங்கேற்றி வருவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

குறிப்பாக, அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற கூட்டத்தையே இவர் தான் நடத்துவதாக மற்ற அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் அரசு கூட்டங்களில் கூட கிருஷ்ணவேணி அப்பாவுக்கு பதிலாக சார்லஸ் தான் தலைவர் என்ற கெட்டப்பில் வலம் வருவதாகவும் கூறப்படுகிறது. ஊராட்சியில் சார்லஸ் செய்த சாதனைகளை கேட்டால், கேட்பவர்களுக்கே தலைசுற்றும் அளவுக்கு உள்ளது. அனுப்பம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பகுதி ஒன்றில் குடியிருப்பே இல்லாத பகுதியில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1 கோடியே 48 லட்சம் செலவில் சாலை பணிகளை அமைக்க ெசால்லி, அந்த பணிகளும் தற்போது முடிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆளே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துற…..என்ற திரைப்பட வசனம் இவருக்கு தான் சரியாக பொருந்தும் என்கிறார்கள்.

இவர் அமைத்த சாலையை யாரும் பயன்படுத்தாததால் அந்த சாலையில் தற்போது புல், பூண்டுகள் முளைத்து யாருக்கும் பயனனற்ற நிலையில் கிடக்கிறது. அடுத்த சாதனையை பார்த்தால், அன்றாடம் வேலைக்கு செல்லும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்துக்கு செல்லும் பயனாளிகள் கூலியிலும் கை வைத்தது தான். இந்த திட்ட பயனாளிகள் ஒரு நாள் வேலைக்கு சென்றால் ஒரு நபருக்கு ரூ.256 வரை கூலி வழங்கப்படுகிறது. குறைந்த தொகை என்றாலும், தினமும் கிடைக்கிறது என்பதால் கஷ்டப்பட்ட மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இந்த திட்டம் மிகவும் உதவிகரமாக இருந்து வருகிறது. இந்த தொகையை வைத்து அன்றாடம் உணவு உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க வேண்டும். அப்படிப்பட்ட பயனாளிகளிடம், கோயில் கட்டுவதற்கு பணம் வழங்க வேண்டும் என்று கூறி ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

எதிர்த்து பேச வழியில்லாமல் அதையும் வாங்கி சென்றுள்ளனர். இதுவரை சுமார் ரூ.16 லட்சம் வரை பயனாளிகளின் கூலியில் கை வைத்துள்ளதாக முறைகேடு புகார் சார்லஸ் மீது கூறப்பட்டுள்ளது. இந்த தொகையிலும், பிடித்து (பறித்து) விட்டு கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்றும் அப்பகுதி மக்கள் சார்லஸ் மீது கடும் கொந்தளிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகள் வயிற்றில் அடித்ததோடு மட்டுமல்ல, இவரது முறைகேடுகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஊராட்சியில் அமைக்கப்படும் சாலைப் பணிகள், ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டியதில் முறைகேடு என இவரது முறைகேடு பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

அதோடு முடியவில்லை, ஊராட்சி மன்ற தலைவரான கிருஷ்ணவேணி அப்பாவுவின் கையெழுத்தை இவரே போட்டு ஊராட்சி பணிகளில் தலையிட்டு வருகிறாம். எனவே, அனுப்பம்பட்டு ஊராட்சியில் இன்னும் என்னென்ன மோசடிகள் அரங்கேறப் போகிறதோ என்ற அச்சம் அப்பகுதி மக்களுக்கு எழுந்துள்ளது. அனுப்பம்பட்டு ஊராட்சியில் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தின் தர்மகர்த்தாவாக சார்லஸ் இருந்து வந்துள்ளார். தற்போது அவரை மாற்றி விட்டு வேறு நபருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆத்திரத்தில், முத்தாலம்மன் ஆலயத்துக்கு பக்தர்களை அனுமதிக்க விடாமல் தடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆலயத்தை சுற்றி உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து அங்கு செங்கல், ஜல்லி உள்ளிட்டவைகளை ஆலயத்தை சுற்றிலும் போட்டு, பக்தர்கள் யாரும் சாமி தரிசனத்துக்கு செல்ல முடியாமல் தடுத்து வருவதாகவும் சார்லஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதனால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனராம். இது ஒருபுறம் என்றால் ஊராட்சியில் நியமிக்கப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கான சம்பளத்தில் உரிய முறையில் வழங்காமல் இழுத்தடிப்பது, அவர்கள் முறையிட்டால் சம்பளத்தை குறைத்து கொடுப்பது என அந்த பணத்திலும் தனது மோசடிகளை அரங்கேற்றி வந்துள்ளார்.

இவரது மிரட்டல் எதிரொலியாக ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அனுப்பம்பட்டு ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட கலெக்டரால், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் துப்புரவு பணியில் முருகன் என்பவருக்கு வேலை வழங்கப்பட்டது. ஆனால் அந்த மாற்றுத்திறனாளியை வேலையை விட்டு நிறுத்தி விட்டு கூலி கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாற்றுத்திறனாளி துப்புரவு பணியாளர் முருகன் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். இந்த அதிர்ச்சி தகவல் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தான் தற்போது வெளியாகியுள்ளது.

தற்கொலைக்கு முயன்று தற்போது சிகிச்சை பெற்று வரும் முருகன், காவல் துறை விசாரணையில் இவ்வாறு வாக்கு மூலம் அளித்த தகவலும் வெளியாகியுள்ளது. தற்போது மற்றொரு மோசடி குறித்த தகவலும் அனுப்பம்பட்டு ஊராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுமனை ஒதுக்கி தருவதாக கூறி பலமுறை பொன்னேரி வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு பொதுமக்களை அழைத்துச் சென்று அலைக்கழித்து அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சார்லஸ் ஏமாற்றி வருவதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு அனுப்பம்பட்டு ஊராட்சியில் புயலை கிளப்பியுள்ளது. ஊராட்சி தலைவர் என்ற போர்வையில் அவரது மகன் நடத்தும் முறைகேடுகள் அனைத்தும் அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருவதால் அவர் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் போர்வையில் மகன் நடத்தும் அடாவடி: குடியிருப்பு இல்லாத பகுதிக்கு ரூ.1.5 கோடியில் சாலை; அனைத்து பணிகளிலும் முறைகேடு; வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மோசடி appeared first on Dinakaran.

Tags : Adavadi ,Panchayat council ,Dinakaran ,
× RELATED குடிதண்ணீர் கேட்டு காலி குடங்களுடன்...